Tuesday, October 18, 2005

 

அனைவருக்கும் கல்வி அளிக்க அரசு தவறி விட்டது: வசந்திதேவி

உலகமயமாக்கலின் தீவிர வளர்ச்சியில் கல்வியின் நிலை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நெல்லை.ம.சு பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி "உலக மயமாக்கலும் கல்வியும்'' என்ற தலைப்பில் சங்கீத சபாவில் உரையாற்றினார்.
""இந்த நாட்டில் கல்வி காப்பாற்றப்பட வேண்டுமானால் கல்வி மூலம் சமூகம் காப்பாற்றப்பட வேண்டும், அதற்கு மாணவர்கள் போராட வேண்டும். இதனை மாணவர் சங்கம் சிறப்புடன் செய்து வருகிறது. உலகமயமாதல் என்பது 90 களில் துவங்கி இன்று தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. நாம் 21ம் நுõற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளில் இருக்கிறோம். உலகமயமாக்கலின் வளர்ச்சியை இப்போதாவது தடுத்து நிறுத்த வேண்டும். இது அறிவு உலகம். கல்வி பிரமாண்டமான உற்பத்தி சக்தியாக உள்ளது. இது குறிப்பிட்ட வர்க்கத்தினரின் கையில் சிக்கி இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. அடிமட்டத்து மக்களுக்கு கல்வி தான் விடுதலை அளிக்கும் கருவி, கல்வி அடிமைதனத்திலிருந்தும் ஏழ்மை நிலைமையிலிருந்தும் மக்களை மீட்க கூடியதாகவும் அமைய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போல கல்வியிலும் சமன் அற்ற நிலையைக் காண முடிகின்றது. இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதம் சமத்துவம். இன்றைய கல்விக் கொள்கை சமத்துவத்திலிருந்து விலகிச் செல்கிறது. நாட்டிலுள்ள அனைவருக்கும் சமமான கல்வியளிக்க இந்திய அரசு தவறிவிட்டது. அரசுப் பள்ளிகளிலும், கிராமப் பஞ்சாயத்து பள்ளிகளிலும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்குத்தான் கல்வி தரப்படுகிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு ஆங்கிலக் கல்வி என்ற நிலை இருக்கிறது. தமிழ் வழிக் கல்வி என்பது சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகள் அடிப்படைவசதிகள் கூட இல்லாத மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. 1970க்குப் பின் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்திருத்தத்தில் அனைவருக்கும் சமமான கல்வி கேட்கின்ற உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கு கட்டணம் செலுத்திப் படிக்கும் படிப்பு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. "வானமே எல்லை' என்பது இன்றைய இளைஞர்க்கு மட்டும் தான், வரலாறு காணாத கனவுகளை திறந்துவிடும் காலமிது. ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நடை பெறுகின்ற வளாக நேர்காணலின் மூலம் மாணவர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கொத்திச் சென்று விடுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் மிக சிலருக்குத் தான் கிடைக்கிறது. இந்நிறுவனங்கள் மீதான இளைஞர்களின் மோகம் வேதனை அளிக்கிறது. தமிழ் நாட்டின் தொழிற் கல்லுõரிகளில் உள்ள 80,000 இடங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எத்தனை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள் என்பதில் ஊடகங்கள் முறையான அக்கறை காட்டுவதில்லை. வசதிபடைத்தவர்கள் விருப்பத்திற்குத் தக்க அந்த பிரிவினருக்கு மட்டும் தான் தரமான கல்வி வழங்கப்படுன்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு வேண்டாம். அவர்களின் பள்ளித் தேர்வு முடிவுகள் போதுமானது என்பது வரவேற்கத் தக்கது. கிராமம், நகரம் என்று பிரித்தால் மட்டும் போதாது. அவர்களில் ஏழை மாணவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவனின் பொருளாதார நிலையை அவனது பள்ளி அரசு பள்ளியா? தனியார் பள்ளியா? என்பதைப் பொறுத்து நிர்ணயித்து விடலாம். தமிழ் மீடியத்தில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தல் நியாயமானதாக இருக்கும். இந்திய சமூகத்தில் அனைவருக்கும் சமமான கல்வி அளிப்பது அரசின் கடமை என இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தாரி கமிஷன் வலியுறுத்திய, அனைவருக்கும் பொதுக் கல்வி என்பது ஒரே மாதிரியான பாடத்தைத் திணிப்பது அல்ல. சமமான தரமான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். இதனை வலியுறுத்திப் போராடினால் கல்வி பொதுவுடைமை ஆகும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பொதுவான கல்வி முறை இருக்கிறது. வட்டார மொழிகளில் தான் கல்வி தரப்படுகின்றது. பொதுப் பள்ளிக்கல்விக் கொள்கைக்கான தீர்மானம் பாராளுமன்றத்தில், 1968, 1986, 1992ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது. உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கலின் நுழைவினால் இக் கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. கல்விக்கான முழு பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய மொத்த உற்பத்தியில் 6% கல்விக்காகச் செலவிடப்பட வேண்டும் என்பது அரசின் குறிக்கோள், ஆனால் 4% நிதியைக் கூட இன்னும் ஒதுக்க முடியவில்லை. 10 ஆண்டுகளில் நுõறு ரூபாய்க்கு அறுபது பைசா செலவழித்தால் கூட அனைவருக்கும் சமமான கல்வியை அளித்திட முடியும். இது குறித்த கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும். நடைமுறையில் இருக்கின்ற சர்வசிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி) முறை கூட கடன் வாங்கித்தான் நடத்தப்படுகிறது. முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை முறையான திட்டம் தேவையில்லை. மாற்றுத்திட்டம் மட்டும் போதுமானது. 5ஆம் வகுப்பு வரை உள்ள கிராமப்புற பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் தான் இருக்கின்றனர். நலிவுற்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு கல்வி கொடுத்தால் போதும் என்ற நிலை உள்ளது. உலகமயமாக்கலில் பொருளாதாரத்துறையில் ஏற்பட்ட தாக்கங்களால் வாழ்க்கை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் நவீன காலக்கல்வி இரட்சகன், கோயில் என்று தகவல் தொழில்நுட்பத் துறையை கனவு காண்கின்றனர். ஆனால் இதன் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. வேலையின்மையினால் படித்தவர்களுக்கும் வாழ்க்கை வாய்ப்பு குறைந்து வருகிறது. இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் போட்டி நிறைந்த உலகத்திற்கு குழந்தைகளும் தள்ளப்படுகிறார்கள். கல்வி என்பது முக்கோண வடிவில் உள்ளது. இதன் உச்சியை பிடிப்பது யார் என்ற போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. குழந்தைகள் நர்சரி பள்ளியிலிருந்தே நசுங்கிப் பிழியப்படுகிறார்கள். சக மாணவர்களை நண்பர்களாக பார்க்காமல் போட்டியாளர்களாகவே பார்க்கிறார்கள். கட்டுரை: அ.தேன்மொழி, மா.கலாவதி கட்டண அடிப்படையில் செயல்படுகிற கல்வி நிறுவனங்கள் அரசிடமிருந்து கட்டிடங்களை இலவசமாய் பெறுகின்ற போது ஏழை மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கு 50% இடமும், கட்டண கல்விக்கு 50% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டுமென சட்டவரைவு கூறுகிறது. கல்வி பிரமாண்டமான ஒரு ஆயுதம். இது ஆதிக்க வர்க்கத்தின் கைகளில் சென்றுவிடாமல், மக்கள் கையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்திய சமத்துவம் மிக்க நாடாக வளரும். இதற்காக இந்திய மாணவர் சங்கம் பாடுபட வேண்டுமென மாநாட்டு சிறப்புரையில் கூறினார்.

Comments: Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?