Tuesday, April 11, 2006

 

இளம் பெண்களை கொத்தடிமைகளாக்கும் ஆலைகள்

"மாங்கல்ய திட்டம்' என்ற பெயரில்
வளர் இளம் பெண்களை கொத்தடிமைகளாக்கும் ஆலைகள்


திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தாலுகாவை சேர்ந்தது "மூலச்சி' கிராமம். இயற்கை அழகு செழித்துக் காணப்படும் இந்தக் கிராமம், பொதிகை மலை அடிவாரத்தில் உள்ளது. இந்த மூலச்சி கிராமமும் அதனைச் சுற்றியுள்ள 9 கிராமங்களும் சேர்ந்தது தனி ஊராட்சி ஒன்றியமாகும்.
இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் விசாயமும், பீடி சுற்றுதலும் மூலச்சி கிராம மக்களில் பெரும்பாலானோர் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். பட்டபடிப்பு வரைப் படித்தவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
மூலச்சி பஞ்சாயத்தின் கீழ் ஒரு அரசு துவக்கப்பள்ளியும், ஆதி திராவிடர் விடுதியும் உள்ளன. மேற்படிப்புக்கு அருகில் உள்ள கல்லிடைகுறிச்சி அல்லது பொட்டலுக்கு சென்று அங்குள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். மூலச்சி கிராமவாசிகள் முழுக்க தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர்கள்.
தினக் கூலியை மட்டுமே நம்பிப் பிழைக்கும் மூலச்சி கிராம மக்களின் வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி வீரவநல்லுõர் அருகே ஒரு கிராமத்தைச் சார்ந்த சுப்பையா பிள்ளை என்பவர் ""படித்தால் எங்கே வேலைக் கிடைக்கிறது? கோபி டெக்ஸ்டைல்ஸ் என்ற மில்லில் நாளொன்றுக்கு ஒரு ரூபாயும், 5 வருடம் கழித்தால் 50 ஆயிரம் ரூபாயும், தருகிறார்கள் '' என மூலச்சி கிராம மக்களிடம் ஆசையைத் துõண்டினார். தினக்கூலிக்கு வேலை பார்த்த இம் மக்களுக்கு தொடர்ச்சியான பணியும் 3 வருடத்தில் 30 ஆயிரம் ரூபாயும் தருகிறார்கள் என்பதனால், தனது வீட்டு 14 17 வயது பெண்களை சுப்பையா பிள்ளையோடு அனுப்பி வைத்தனர். தங்குமிடம் மற்றும் உணவு இலவசம் என்பதாலும் வரும் வருவாயை அப்படியே சேமித்துப் பெண்களின் திருமண செலவுக்கு வைத்துக் கொள்ள எண்ணினர், பிள்ளைகளை அனுப்பி வைத்த பெற்றோர்களில் ஒருவரும், முந்தைய ஊர் நாட்டாமையுமாகிய பெ.சண்முகம் கூறுகையில், "" தமது பிள்ளைகள் தங்கியிருந்த இடம் சுகாதார சீர்கேடாகவும், நெறிசல் நிறைந்த இடமாகவும் இருக்கிறது. முதலில் 8 மணி நேரம் வேலை வாங்கிய மில், பின்னதாக 12 மணிநேரமாக வேலையை உயர்த்தியதால் பெண்கள் வேலை செய்வதில் சோர்வுற்றனர்'' எனக் கூறினார்.
சண்முகத்தின் மகள் வேலுமயில், ""12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து வந்த எங்களை, அங்குள்ள சுப்பிரவைஸ்சர்கள் ஏதேனும் பிழை செய்தால் " நாயே, பன்னி' என்று தம்மைத் திட்டினர். இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டோம்'', என்று கூறினார்.
தவிர, சுமார் 500 மாணவிகள் தங்கும் விடுதியில் 3 கழிப்பறை மட்டுமே இருந்ததால் "கக்கூஸ் பத்து' போன்ற நோய் ஏற்பட்டதாகவும் கூறினார்.
மில்லில் பணி செய்த மு. சந்தனமாரி, கூறுகையில் "" முதல் மாதம் 150 ரூபாய் மட்டுமே ஊதியம் தந்தனர். பின்னர் 350 ரூபாய் வரை தமது மாத ஊதியத்தை உயர்த்தினர். நாளொன்றுக்கு 30 ரூபாய் என்ற ஊதியக் கணக்கில், உணவு மற்றும் மருத்துவ செலவுக்கு பணத்தை பிடித்துக் கொண்டார்கள். மேலும் 8 மணிநேரம் உழைக்கும் நேரத்தை, 12 மணிநேரமாக உயர்த்தும் போது, எந்த ஊதிய உயர்வும் தரவில்லை. நோய்வாய்பட்ட பெண்கள் விடுப்பு கேட்டால், ஒரு ஷிஃப்டாவது பார்' என்று கட்டாயப் படுத்துவார்கள்'' என்று கூறினார்.
சந்தனமாரியின் தகப்பனார் சு. முருகப்பெருமாள், "" வாரம் ஒரு முறை எங்கள் மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வோம். அவள் கவலையுடன் பேசுவதை உணர்ந்து, மகளைப் பார்க்க கோபி டெக்ஸ்டைல்ஸ் சென்றேன்.
அங்கு அவள் படும் கஷ்டத்தை அறிந்து வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தேன். எனவே, நிறுவனத்தின் அதிகாரியைச் சந்திக்க முற்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. ஆட்களைக் கொண்டு தாக்கவும் செய்தனர். இதன் விளைவாக அருகில் உள்ள காவல் துறையில் புகார் செய்தேன். பின்னரே எங்கள் மகளை காவல்துறை மீட்டு தந்தது '' எனக் கூறினார்.
சு. முருகபெருமாள் நடந்ததை ஊர் மக்களிடம் வந்து கூறவே, மீதமுள்ள பெண்களின் பெற்றோர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் கலெக்டரிடம் புகார் கூறியதன் பேரில் , கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 14 பெண்களும் டிசம்பர்27,2005ல் மீட்கப்பட்டனர். அவர்கள் முறையே பெ. சண்முகம் மகள் வேலுமயில், ச. ஆதிமூலம் மகள் பொற்செல்வி, செ. மகாலிங்கம் மகள் பார்வதி, து. முருகாண்டி மகள் விஜயராணி, பெ.மாடமுத்து மகள் இந்தரா, பெ. கிருஷ்ணன் மகள் கலா, மா. மாடசாமி மகள் முருகம்மாள், சு. மூக்காண்டி மகள் பால்கனி, ச. மாடசாமி மகள் ரேவதி(பார்வதி), வ. சுடலை மகள் மகேஷ்வரி, சு. முருகப்பெருமாள் மகள் சந்தனமாரி, செல்லத்துரை மகள் அஸ்வினி, சுப்பிரமணி மகள் ஆனந்த செல்வி மற்றும் பூவையா மகள் சித்ரா ஆகியோர் ஆவர்.
மீட்கப்பட்ட 14 பெண்களும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒப்படைக்கப்பட்ட பெண்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. வறுமையின் காரணமாக மீட்கப்பட்ட 14 பெண்களில் 9 பேர் திருப்பூரில் உள்ள மில்களுக்கு வேலைக்கு மீண்டும் சென்று விட்டதாக, பெ. சண்முகம் கூறினார்.
கல்வி, பொருளாதாரம் போன்ற தேவைகள் பூர்த்தியாகாதவரை இந்த அவலத்தை நீக்குவது கடினம் என ஊராட்சி தலைவர் ராமையா கூறுகிறார்.

மூலச்சி கிராம மக்களின் இந்த அவலநிலை குறித்துக் "களம்' என்ற தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் பரதனிடம் விவாதித்தேன்

"" திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் 84% பேர். சொந்த விளைநிலம் அற்றவர்கள். இதற்குக் காரணம் நிலங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நபர்களிடம் குவிந்து காணப்படுவதே ஆகும். திருநெல்வேலி மற்றும் அதன் அண்டைய மாவட்டங்களில் மட்டும் 13 ஜமீன்களிடம் நிலம் குவிந்து கிடக்கிறது.
கடம்பூர் ஜமீன், சிங்கம்பட்டி ஜமீன், உரயத்துõர் ஜமீன், ஊத்துமலை ஜமீன், குறுக்கல்பட்டி ஜமீன், தலவன் கோட்டை ஜமீன், நெல் கட்டும் சேவல் ஜமீன், சிவகிரி ஜமீன், உக்கிரங்கோட்டை ஜமீன் ஆகியவை ஒரு சாதியை சார்ந்தவர்களின் ஜமீன்களாகும். இவை தவிர எட்டையபுரம் ஜமீன், இளையஅரசவேந்தர் ஜமீன், தளவாய் முதலியார் ஜமீன் பிற சாதியைச் சார்ந்தவர்கள் ஆவர். இதில் தளவாய் ஜமீனுக்கு சொந்தமான நிலங்கள் பெரும்பாலும் தாமிரபரணி நதி ஓரத்தில் காணப்படும் நிலங்களாகும். ஜமீன்களிடம் மட்டுமல்லாது நெல்லையப்பர், வரதராச பெருமாள், தருமை ஆதினம், திருவாடுதுறை, ஈசானமடம், நாங்குநேரி ஐயர் மடம் போன்ற கோவில்களுக்குச் சொந்தமாகவும் பெரும்பாலான நிலங்கள் காணப்படுகிறது.
இந்நிலையில், நிலமற்ற ஏழை மக்கள் உள் குத்தகையாக நிலங்களைப் பெறுகின்றனர். விவசாயம் செழிக்காத காலங்களில் கடனாளியாக மாறி, தினக்கூலியாக மாறிவிடுகின்றனர். 25% பேர் வரை கிராமத்திலிருந்து "தொழில் தேடி' இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந்த இடம் பெயர்வு பருவ இடம் பெயர்வு மற்றும் நிரந்தர இடம் பெயர்வு என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. பம்பாய், சென்னை போன்ற இடங்களுக்கு "தொழில் தேடி' செல்லுதல் நிரந்தர இடம் பெயர்வு ஆகும். அருகில் உள்ள ஊர்களிளோ, நகரங்களிலோ செங்கல்சூளை போன்றவற்றில் பணி செய்த மீண்டும் தமது கிராமத்துக்கே திரும்புதல் பருவ இடம் பெயர்வு ஆகும்.
இதன் தொடர்ச்சியாக உலகமயமாக்கலின் காரணமாக 2000ம் ஆண்டிலிருந்து 12 முதல் 18 வயதிலான வளர் இளம் பெண்கள், நுõற்பாலைகள் போன்றவற்றில் "மாங்கல்ய திட்டம்' என்ற பெயரில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாரே மூலச்சி கிராமப் பெண்களும் ஆசை வார்த்தை கூறி, உழைப்பைச் சுரண்டும் நோக்கில் வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டனர். அந்த 14 பெண்களை மீட்டு வந்து, கிராமத்தில் பெற்றோரிடம் சேர்த்த மாட்ட நிர்வாகம் இதுவரை நிவாரணத் தொகையோ, மறு வாழ்வுக்கான உதவியோ அப்பெண்களுக்கு கிடைக்கச் செய்யவில்லை யெனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், மீட்கப்படும் பெண்களுக்கு வேறு வழி காட்டாததால், அப் பெண்கள் வேறு வேலைக்கு மீண்டும் வெகுதுõரம் செல்கின்றனர். மீண்டும் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க ஏழை எளிய மக்களுக்கு சொந்தமாக நிலம் வழங்குவதே சரியான முடிவாக இருக்கும் என கூறினார்.

மர நிழலில் ஊஞ்சல் ஆடி மாணவர்கள் கதை பேச வேண்டும்: வசந்தி தேவி





முதல்ல இங்கிலீஷ் மீடியமே இருக்ககூடாது. ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது இரண்டாம் மொழியாக இருக்க வேண்டும். பாடங்களை கற்றுக் கொடுப்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். தரம் றைந்த ஆசிரியர்கள் பணிபுரிவதால் குழந்தைகளின் கேள்வி கேட்கின்ற உரிமை, குணம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற மகளிர்தினத்தில் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும், தமிழ்மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான வசந்திதேவி கலந்து கொண்டார். அவர் தாமிரபரணிக்கு பேட்டியளித்தார்.
* பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள தாங்கள் கல்விக்கான உரிமை பற்றி கூறுங்கள்.
பதினெட்டு வயது வரையுள்ள அனைவருக்கும் கட்டாயக்கல்வி தரப்பட வேண்டும். இளம் குற்றவாளிகள் சட்டத்திலும் மற்ற அரசு சட்டங்களிலும் 6முதல் 18வயது வரையுள்ள அனைவரும் குழந்தைகள் எனக் கருதப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைக்கான உரிமையை 18வயது வரை நீட்டிக்கவேண்டும் என்பது எங்களது கல்வி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வேண்டுகோள்.
* பல்கலைகழகம் மற்றும் கல்லுõரி பெண்களிடம் அவர்களுக்கான உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு இருக்கின்றதா?
அவர்களுக்கும் இல்லை, மறறவர்களுக்கும் இல்லை. பேப்பரில் படித்த அளவு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். அதுவும் கூட சொல்லிக் கொடுத்தால் தான் தெரிய வாய்ப்புள்ளது.உரிமை மீறல்கள் நடைபெறுகின்ற வேளைகளில், அவற்றை ஒன்று சேர்த்து, போராடிப் பெறுகின்ற விழிப்புணர்வும், தைரியமும் முழுமையாக வந்து விடுவதில்லை.
* கிராமப்புற பெண்களுக்கு கல்வி கிடைக்கின்றதா? கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இல்லை, அது கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் எல்லோருமே பள்ளிக்கு வருவதில்லை. பள்ளியில் 12 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 15% பேர் தான் வெற்றி பெருகிறார்கள். மற்றவர்களெல்லாம் பல்வேறு நிலைகளில் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். கல்லுõரிக்கு வருவது 7% பேர் மட்டுமே தமிழ்நாட்டில் பாதிக்கப்படுவது தலித் மக்களும், பழங்குடியினரும், ஏழை மக்களும் தான். உயர்கல்வியிலும், வேலையிலும், ஆதிதிராவிடர்களுக்கான ஒதுக்கீடு இருக்கின்றது. இதற்கு தகுதியானவர்களே மிக கொஞ்சம் பேர்தான். ஏனெனில் இவர்களை கல்வி நிலையத்திலேயே வடிகட்டி விடுகிறோம். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுவது முன்பு இருந்ததை விட இப்போது ரொம்ப மோசமாகி விட்டது.
நாங்கள் படிக்கின்ற காலங்களில் தமிழ் வழிகல்வி மட்டும் தான் இருந்தது. இங்கிலீஸ் மீடியம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது. எல்லோரும் ஒரே தரத்தில் அரசுப் பள்ளிகளிலே தான் படித்தோம். அது நானாக இருந்தாலும் சரி, அப்துல் கலாமாக இருந்தாலும் சரி தமிழிலே, தாய் மொழியிலே படித்து நல்ல நிலைக்கு முன்னேற முடிந்தது. இன்றைக்கு இங்கிலீஸ் மீடியம் இல்லைன்னா அது கல்வியே இல்லைன்னு ஆகிப்போச்சு 8வது வரையுள்ள பஞ்சாயத்து அரசுப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் 40% ஆதிதிராவிடமாணவர்கள் தான் இருக்கிறார்கள். அதிலும் ஏழை மாணவர்கள் பள்ளியை விட்டு இடையில் நின்று விடுகிறார்கள். இதனை மாற்றிப் பொதுக்கல்வித்திட்டம் கொண்டுவர வேண்டும் அதை வட்டாரப்பள்ளி என்று சொல்வார்கள். அதாவது, அதிக கட்டணம் வாங்க கூடிய பள்ளியாக இருந்தால் கூட, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மாணவர்களைக் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உலகம் அனைத்தும் பின்பற்றுகின்ற நடைமுறைதான். புதிதல்ல
* பெண்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க நீங்கள் முன் வைக்கும் பரிந்துரைகள் என்ன?
தற்போது நடைமுறையில் இருக்கின்ற சர்வ ஹிக்ஸா அபியான் என்று அழைக்கப்படும் கல்வி திட்டம் மூலம் ஒரளவு தன்னிறைவு அடைந்திருக்கிறோம் என்கிறார்கள். அது எந்த அளவிற்கு உள்ளதென்று தெரியவில்லை. பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளும் 8ம் வகுப்புக்குப் பிறகு கல்வியை விட்டு விலகும் நிலை காணப்படுகிறது. இதனைத் தடுக்க தரமான கல்வி கொடுக்கப்படவேண்டும். ஒரு சில கிராமப்புறப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். சரியான அஸ்திவாரம் போடவேண்டிய இடத்தில் ஆசிரியர்கள் தேவை. நகரங்களில் மாணவர்கள் பள்ளி நேரம் தவிர டியூசன் படிக்கின்றனர். படித்த பெற்றோர்களும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் கிராமபுற மாணவர்களுக்கு இவை எதுவும் கிடைப்பதில்லை. கல்வி முறையும் மாணவர்களின் மீது சுமை ஏற்றப்படுவதாக உள்ளது. பாடங்கள் முழுவதையும் மாலை 4மணிக்குள் படித்து முடிக்க இயலாது. முழுமையாக கற்க மாணவர்கள் பணம் செலவு செய்து டியூசன் செல்லவேண்டும். இதனால் அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைக்கும் என்பது அர்த்தமற்றதாகி விடுகிறது.
*ஆங்கில வழிகல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக 12வது பாஸ் செய்தவர்களும், டிகிரிபடிப்பில் தவறியவர்களும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். இவர்களின் கற்பித்தல் எந்த அளவில் இருக்கும்னு நினைக்கிறீங்க?
உண்மைதான் முதல்ல இங்கிலீஷ் மீடியமே இருக்ககூடாது. ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அது இரண்டாம் மொழியாக இருக்க வேண்டும். பாடங்களை கற்றுக் கொடுப்பது தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். தரம் குறைந்த ஆசிரியர்கள் பணிபுரிவதால் குழந்தைகளின் கேள்வி கேட்கின்ற உரிமை, குணம் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. இதனால் அந்த குழந்தைகளுக்கு ஆங்கிலமும் பேசத்தெரியாது, தமிழும் பேசத்தெரியாது. அவர்கள் முழுவதும் மனப்பாடம் செய்தே பழகி விடுகின்றனர். இவற்றை மாற்ற, 12வது வகுப்பு வரை தாய் மொழியில் தான் பாடம் கற்பிக்கவேண்டும். என்பது "கல்வி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முக்கியமான வேண்டுகோளாக வைத்திருக்கிறோம். மேலும், 5வது வரையில், மொழியால் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கவேண்டும் என அரசைக்கேட்டு வருகிறோம். ஆங்கில வழிக்கல்வியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே அது படிப்பு என்பது போன்ற மாயை நடுத்தரவர்க்கத்தினரிடம் உருவாகிவருகிறது. ஆங்கில வழிக்கல்வியை கற்பிக்க தனித்த முறையிருக்கின்றது. இதனைத் தாய்மொழியை கற்றுத்தருகின்ற முறைப்படி கற்றுத்தரக்கூடாது. எப்பொழுதும் 2ம் மொழியாகத்தான் ஆங்கிலத்தை வைக்க வேண்டும். ஸ்கூல் சிஸ்டம் 2 வகையில் நலிவடைந்து வருகிறது.
1 அரசு பள்ளிகளுக்கு எந்த வசதியும், செய்து தராதிருப்பது.
2 ஆங்கில வழி தனியார் பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளையும் கொடுப்பது.
அரசுப் பள்ளிகளில் வசதிகளும், ஆசிரியர்களும் குறைவாக இருப்பதால் மக்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகள் அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். இதனால் வசதியுள்ளவர்கள் அரசு பள்ளிகள் பக்கம் வர விரும்புவதில்லை. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் கேள்வி கேட்கவே ஆள் இல்லாத நிலை உருவாகின்றது. சமீபத்தில் எங்களின் கல்வி என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட சர்வேயில் 29மாவட்டங்களில் உள்ள 8வது வரையுள்ள குழந்தைகளின் வாசிப்புத்திறன் மற்றும் கணக்கிடும் தன்மையை ஆய்வு செய்த போது, 5ம் வகுப்பில் படிக்கின்ற 60% குழந்தைகளால் 2ம் வகுப்பு பாடத்தை முழுமையாக வாசிக்க முடியவில்லை, 8வது வகுப்பு குழந்தைகளால் 5ம் வகுப்பில் உள்ள கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டின் கிராமபுற பள்ளிகளில் உள்ள குழந்தைகளை அழைத்து பாடத்தை வாசிக்க சொன்னால், "குடு, குடு' வென வேகமாக வாசிக்கும். இடையில் நிறுத்தி, ஒரு வரியை படிக்க சொன்னால் தெரியாது. ஏனெனில் அது மனப்பாடம் செய்து வைத்திருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் குழந்தைகளின் கல்விதரம் பீகார், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களை விட மிக மோசமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் , கற்றுக்கொள்கின்ற அளவு மிக குறைவு. கிராமபுற படிக்காத ஏழை மக்களின் குழந்தைகள் தான் அதிகமாக அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவு.பெற்றோர்களும் படித்தவர்களாக இல்லை. இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிகளுக்குள் நுழையவே பயப்படுவார்கள். ஒரு சிலர் வந்தாலும், படிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும்? போ வெளியே என்று சொல்லி விடுவார்கள். இதனால் அங்கே கேள்விகேட்க ஆளே இல்லை. இதற்கு தீர்வு வேண்டுமென்றால் பொதுகல்வி முறை ஒன்று உருவாக வேண்டும். இதில் ஊரிலுள்ள ஏழைகளின் குழந்தைகளும், கலெக்டர், அரசு அலுவலர்களின் குழந்தைகளும் ஒரே பள்ளியில் படித்தால், அவர்கள் கேள்வி கேட்பார்கள். படிப்படியாக அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும். இதனால் தான் பொதுக்கல்வி முறை வேண்டும்.என்கிறோம்.
* பீகார், சத்தீஸ்கர்,உத்திரபிரதேச மாநிலங்களில் மாணவர்கள் எவ்வாறு தமிழ்நாட்டை விட கற்கும் விகிதத்தில் உயர்ந்து நிற்கின்றனர்.
தமிழ்நாட்டில் 90% குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்களிடமும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. வட மாநிலங்களில் அப்படி இல்லை. ஒரளவு ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் மட்டும் பள்ளி செல்கின்றனர். இதனால் அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள்.என நினைக்கிறேன். இதற்கான சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தைகளாக இருக்கிறதால அவங்க அதிகம் படிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். சமீபத்திய கல்விக்கான கணக்கெடுப்புகளில் தொடர்ந்து பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவும், கற்கும் நிலை அதிகமாகவும் இருக்கிறது. ஒரிசாவில் அதிகமான பள்ளிகளில் மாணவர்கள் ஒரியாவில் (தாய்மொழி)தான் படிக்கின்றனர். இங்கிலிஷ் மீடியத்திற்கு போறவங்க ரொம்ப குறைவு. எல்லோரும் தாய்மொழியில் படிக்கிறார்கள். அவங்களுக்கு நிறைய புரிகிறது.
நம்ம குழந்தைகளுக்கு இங்கிலிஷ்ல படிக்கிறதால பாடம் புரியுறதில்லை. நடுத்தர வர்க்க குழந்தைகள் எல்லாம் இங்கிலிஷ் மீடியம் படிக்கிறதால,ஆசிரியர்கள் அரசு தமிழ் பள்ளிகளில் இல்லை. இதனால் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக காணப்படுகிறது.
* உயர்கல்வி படிப்புகள் அனைத்தும் தமிழில் இல்லை மாணவர்கள் உயர்கல்வியை ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலை இருப்பதாக பேசப்படுகிறதே?
நிச்சயமாக இல்லை. மருத்துவக் கல்லுõரி முதல் பொறியியல் கல்லுõரி பாடங்கள் வரை அனைத்து படிப்புகளும் யாழ்பாணத்தில் தமிழில் இருக்கின்றன. நாங்கள் படிக்கின்ற காலங்களில் தமிழில் தான் படித்தோம். பல அரசு கல்லுõரிகளிலும் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தமிழிலும் ஆங்கிலத்துலும் நடத்துகின்றனர். ஆகவே தமிழில் பாடங்கள் இல்லை என்று சொல்லிட முடியாது.
* "சுமங்கலிதிட்டம்' என்ற பெயரில் மில் தொழில்களில் குழந்தை தொழிலாளர்களை ( பெண்) வேலைக்கு அமர்த்துவதால் பெண்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்?
வேலையில்லாத நிலை இதற்கொரு முக்கியகாரணம். நிரந்தரமான வேலையிருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். குழந்தைகள் 12 வரை படித்தாலும் வேலையில்லை.இதற்கு மில் வேலைக்கு சென்றால் வாழ்வூதியமாவது கிடைக்கும். இதை தனிப்பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தீர்வு காண முடியாது. முதலில் வேலை வாய்ப்பு பெருகவேண்டும். பின்பு வளர்ச்சி தானாகவே வந்து விடும்.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனை நிரப்பினால் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இதெல்லாம் அரசுக்கு பெரிதாக தெரிவதில்லை. வேலை வாய்ப்பு அதிகரித்தால் தீர்வு கிடைக்கும்.
* சுய உதவி குழுக்களின் எழுச்சியை பெண்ணின் எழுச்சியாக கொள்ள முடியுமா?
ஒரு வகையில் வளர்ச்சி தான். சுயஉதவிகுழுக்களின் மூலம் பெண்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது. ஒன்றாக கூடி விவாதித்து தீர்வு காணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. முக்கியமாக வட்டிகாரர்களிடமிருந்து மீண்டு வாழ்கிறார்கள். பல பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வங்கியில் பணம் போடுவது லோன் வாங்குவது, சந்தையில் பொருட்களை வாங்குவது குழுவின் உற்பத்தி பொருட்களை விற்பது போன்றவற்றில் அனுபவம் பெருகின்றனர்.
மற்றொரு வகையில், உற்பத்தி செய்த பொருட்களை விற்பதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அன்றாடம் பயன்படுத்துகிற அனைத்து பொருட்களும் மிகப் பெரிய கம்பெனிகளினுடையவை. குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் கம்பெனிகளோடு போட்டி போட்டு விற்க வேண்டிய சூழல் உள்ளது. மல்டி நேஷனல் கம்பெனிகள் தருகின்ற விலைக்கு, இவர்கள் பொருட்களை தர இயலாது. ஒரு சில குழுக்கள் சில முக்கிய தொழில்களை கையில் எடுத்து திறம்பட செய்கிறார்கள். மகளிர் குழுக்கள் அனைத்தும் எழுச்சி அடைந்துவிடவில்லை.
* பொதுவாக அரசியல் அதிகாரங்கள் எப்படியிருக்க வேண்டும்?
அரசின் திட்டங்கள் சென்னையில் மட்டுமே தேங்கிவிடக்கூடாது. திட்டங்கள் பஞ்யாத்துகளில் உருவாக்கப்படவேண்டும். கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கிராம சபைகளில் உருவாகும் சட்டங்கள் தான் அமலாக்கப்படவேண்டும். மத்திய அரசின் கட்டமைப்பின் ஒன்றான பஞ்சாயத்துகளுக்கு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அதிகாரமும். நிதியும் வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பஞ்சாயத்திற்கு 8% தான் ஒதுக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகாவில் 32 முதல் 38% வரை வழங்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதாரமையங்களின் பராமரிப்பு பஞ்சாயத்துகளால் மட்டுமே சிறப்பாக செய்யமுடியும்.
* பாலியல் கல்வி தமிழக பல்கலைகழகங்களில் துவங்கபடவேண்டுமா?
அனைத்து மாணவர்களுக்கும் பாலியல் கல்வி அவசியம். இது மதர் தெரெஸா பல்கலைகழகத்தில் இருக்கின்றது. பாலியல் கல்வி என்பது அனைத்து துறைகளிலும் இருக்கவேண்டும். ஒரு துறையாக இருந்தால் சிலர் மட்டுமே படிப்பார்கள். எல்லாத்துறைகளிலும் ஒரு பாடமாக பெண்கல்வி இருந்தால் அனைவரும் படிக்க வாய்ப்புள்ளது.பொருளாதாரம் படிப்பவர்கள் பெண்களின் பொருளாதார நிலை பற்றியும், சமூகவியல் படிப்பவர்கள் சமூகத்தில் பெண்களின் நிலை பற்றியும், தங்களது பாடங்களில் பெண்கல்வியை இணைத்து கற்க வேண்டும்.
* வீட்டிற்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க உங்களின் யோசனை என்ன?
ஒவ்வொரு பெண்ணுக்கும் மணமுடித்து வாழ்கின்ற உரிமை உண்டு. மன வாழ்க்கைøயிலிருந்து சட்டப்பூர்வமாக விலகி கொள்ளவும். உரிமை உண்டு. என்பது பெண்களுக்கு தெரிய வேண்டும்.குடும்ப கவுரவும் குறைந்து விடும். என்பதற்காக பல பெண்கள் தங்களின் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை. அவர்கள் தாய்வீட்டிற்கு கூட செல்வதில்லை. ஒரு பெண் கொடுமைகளின் பேரில் புகார் செய்தால், அவளுக்கு மணவாழ்வும், பாதுகாப்பும் பெற்று தர சட்டத்தில் இடம் உண்டு. முதலில் பெண்களின் மாற்று வருமான வழிவகையும், தைரியமும், பெற்று தரப்பட வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு பெண்ணும் ஏதாவதொரு பெண் அமைப்பில் உறுப்பினராக இருக்கவேண்டும்.

* ஊடகங்களில் பெண்களின் நிலைக்கு தீர்வு என்ன?
பெண்கள் வியாபாரப்பொருட்கள். இது வணிக கலாச்சாரம். அழகு கலாச்சாரம் பெருக, பெருக இந்த வியாபாரமும் வளர்ச்சி பெறுகிறது. பெண்களின் உடல்கள் விற்கப்படுவதை போல, பிம்பங்கள் விற்கப்படுகின்றன. ஊடகங்களில் வலம் வரும் பெண்கள் அனைவரும் படித்தவர்கள் தான். இதனால் மக்கள் அத்தகைய ஊடகங்களை நுகராமல் இருப்பதே தீர்வாக அமைய முடியும்.
*தொட்டில் குழந்தை திட்டம் மூலம் பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றனவா?
தொட்டிலில் போய் சேர்ந்த குழந்தைகள் மட்டும் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், பல குழந்தைகள் இன்றும் மடிந்து கொண்டு தான் இருக்கின்றன. முழுவதுமாக வெற்றி பெற்ற திட்டமாக சொல்ல முடியாது.
*மாணவர்கள் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து?
நிச்சயமாக மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். பலர் மாணவர்களை வர விடுவதில்லை. மாணவர்கள் அரசியலில் இறங்கினால் கேள்வி கேட்பார்கள். கேள்வி கேட்பவர்களுக்கு பதில் தர இயலாததால் சிலர் தடையாக இருக்கிறார்கள். 1998 ல் அனைத்து கல்லுõரி முதல்வர்களையும் அழைத்து கல்லுõரிகளில் மாணவர் யூனியன் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். பல கல்லுõரிகளில் அமைத்தார்கள். ஆனால் இப்போது அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை
* "இன்டர்னல் அஸெஸ்மெண்ட்' பல முறைகேடான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கின்றனவே. அவை தேவை தானா?
இன்டர்னல் அஸெஸ்மெண்ட் என்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது மிகவும் தேவை. மாணவனின் வகுப்பறை விவாதங்களில் பங்கேற்பை அதிகரிக்கவும், அன்றாட வகுப்பறையில் திறமைகளை துõண்டுவதற்கும், மாணவர்களிடையே ஆரோக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். ஆனால் பலர் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆசிரியர்களே இல்லை. இதனால் பல பாலியல் தவறுகளும் நடைபெற்றிருக்கின்றன. 50% மார்க் ஆசிரியர்களின் கையில் இருப்பதால் ,பெண்கள் வெளியே சொல்லாமல் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இன்டர்னல் மார்க்கை தவறாக பயன்படுத்துகின்றவர்கள் புனிதமான ஆசிரியர் வேலைக்கு தகுதியற்றவர்கள்.
* டிரஸ் தோடு பற்றி.......
பணம் படைத்த மாணவர்களோ, ஆசிரியர்களோ செல்வத்தை வெளிபடுத்தும் ஆடம்பர ஆடைகள் அணியக்கூடாது. அணிகின்ற ஆடைகள் மற்ற மாணவர்கள் பார்த்து ஏங்கும் வண்ணம் இருக்க கூடாது. மற்றபடி, விருப்பம் போல் அணிந்து கொள்ளலாம். ஒரு சில மாணவர்கள் கவர்ச்சி உடைகளை அணிகிறார்கள் என்பதால் எல்லோரையும் நிர்பந்திக்க கூடாது.
அனைத்து மாணவர்கள் பங்கேற்காத வெள்ளைக்கார முறையிலான பட்டமளிப்பு விழா தேவையா?
தேவையில்லை தான். அதை மாணவர்கள் தான் நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். அது உங்கள் விருப்பம்.
* தனியார் கம்பெனிகளின் வளாக தேர்வு மாணவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கிறதா?
கம்பெனிகள் சில அளவுகோல்கள் வைத்திருக்கின்றன. அவற்றை தொடும் மாணவர்களை தேர்வு செய்கின்றன. கல்லுõரி படிப்பில் மாணவனா. பாஸா, பெயிலா, என்பதெல்லாம் அவை பார்ப்பதில்லை.
19) துணைவேந்தராக மாணவர்களுக்கு நீங்கள் செய்ய நினைத்ததென்ன?
என் மனதில் நிறைய ஆசைகள் உண்டு. அதில் பல நிறைவேறாத ஆசைகள். மாணவர்கள் வகுப்பறைக்குள் மெல்லிய பிண்ணனி இசையோடு பாடம் கற்கவேண்டும். ஆய்வுக்கூடங்களிலும் இசை மனதின் சோர்வை போக்கி சுகமளிக்கும் விதமாக இருக்க வேண்டும். பல்கலைகழக வளாகத்திற்குள் உள்ள அனைத்து மரங்களிலும் ஊஞ்சல் போடவேண்டும். மாணவர்களும், மாணவிகளும் அவற்றில் அமர்ந்து விவாதிக்க வேண்டும். கருத்துக்களுக்கு சுதந்திரம் இருக்கவேண்டும். மாணவ, மாணவிகளின் மணம் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும். என்பது எனது நீண்ட நாள் ஆசை.
* பாடதிட்டங்கள் மாணவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கட்டிப்போடுவதாக பேசப்படுகிறதே?
பாடதிட்டங்கள் மாணவர்களுக்க வழிகாட்டுபவை தான். பரிட்சைக்காக மட்டுமே படிக்காமல் அறிவை வளர்த்துக்கொள்ள விசாலமான தேடல்கள் மாணவர்களிடம் தேவை. பாடதிட்டங்களோடு, வாழ்வியலையும் படிப்பது தான் மாணவ தேவைகளாக இருக்க வேண்டும்.

அ. இசைச்செல்வப்பெருமாள்
ஆர். பத்ம லதா
பி. வினோத்
ஜா. தினேஷ் அருமைநாயகம்.



ராதிகாவும், தேவயானியும்
பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வது சரியா?







மீடியாக்கள் தனது விற்பனையை அதிகரிக்கவும், விளம்பரதாரர்களைப் பெறவும், பல வழிகளை கையாண்டு வருகின்றன. மக்களின் உணவு, உடை போன்ற விசயத்தில் தலையிட்டு வந்த ஊடகங்கள், பின் அந்தரங்க விஷயத்திலும் தலையிட்டு இன்று தீர்வு சொல்கின்றன. தொடக்கத்தில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களால் வழங்கப்பட்டு வந்த ஆலோசனை, இன்று எவ்வித தகுதியும் இன்றி, நாடகங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் பிரபலமாக உள்ளவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
மீடியாக்கள் மூலம் புகழ் பெற்ற இவர்கள் மக்களின் அந்தரங்க விசயத்திற்கு ஆலோசனை கூறும் போது, உண்மையிலேயே அதற்குண்டான திறமையுள்ளவர்களா? அல்லது மனநலத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள்தானா? மீடியாக்கள் மூலம் கிடைக்கும் புகழை இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவது சரிதானா? என்பது பற்றி தமிழ்த்துறை பேராசிரியர் ராமசாமியை அணுகியபோது:
""மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாண இரண்டு முறைகளைக் கையாள்கின்றனர். ஒன்று ரகசியமாக பூசாரி, ஜோதிடர்கள், போன்றவர்களை அணுகுவது, யாகம் செய்வது, மற்றொன்று தனக்குள்ள பிரச்னையை இப்படி வெளிப்படையாக சொல்லி அது மூலமாக விடை தேடறது. இவங்களைப் பொறுத்தவரை தனக்குள்ள பிரச்னையை போலவே பலருக்கும் இருக்கும் என நினைக்கிறாங்க. இப்படி மீடியா மூலமாக கிடைக்கிற தீர்வு, அவங்களுக்கும் தீர்வா இருக்கும் என நம்பறாங்க. ஆனால் இப்படி மீடியா பாப்புலாரிட்டியால இப்படி சிக்கலுக்கு தீர்வு காண்பது ஒரு தவறான அணுகுமுறைதான்.
மக்கள் பிரச்னைகளை தேவயானி என்ற நடிகையிடம் அல்லாமல், ராதிகாவை ஒரு நடிகையாக பார்க்காமல் அபியாகவே, செல்வியாகவே நினைக்கின்றனர். ஏன்னா இவங்க மீடியாவில் புனிதர்களாகவும், இவங்களையே மையப்படுத்தி காட்டறதாலயும் அதை உண்மை என்று மக்கள் நம்ப வைக்கப்படறாங்க. இன்னைக்குள்ள வாழ்க்கை நடைமுறைல மனிதன் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கு எனவே அவன் தனக்கு எதிராக ஒரு சதி நடக்கிறதாகவே நினைக்கிறான். இதில் இருந்து மீளுவதற்காக கடவுளையோ அல்லது புத்திசாலித்தனத்தையோ நம்ப தொடங்கறான்.
மீடியாவில அபி, செல்வி இவங்க எல்லாம் புத்திசாலியா காட்டப்படறதால தன்னிடம் இல்லாத அறிவு அவங்ககிட்ட இருக்கிறதா நம்பறான். எல்லா சிக்கல்களையும் அந்த கதாபாத்திரம் தீர்க்கும் என எண்ணுகிறான். ஆனால் உண்மையில் கேள்விகளுக்கு பதில் சொல்ல, ஒரு குழுவாகவே செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிபுணர்களை கலந்து பேசி அவர்கள் பதிலை செல்வி, அபி, பதில்களாக வெளியிடுகின்றார்கள். இது ஒரு குழு முயற்சிதான். இதோட முக்கிய நோக்கம் விற்பனையை அதிகரிப்பதுதான்.
இன்றைக்கு மீடியா 2 வகையான மக்களை தன்னோட வசம் வச்சிருக்க விரும்புது.
ஒன்று வாசகர்கள் இவங்க படிக்கவும், பார்க்கவும் மட்டும் செஞ்சுட்டு போயிடறாங்க. இரண்டாவதா (கச்ணூtடிஞிடிணீச்tஞுணூண்) இதில் பங்கேற்பவர்கள் இந்த வகையான மக்களை தக்க வைக்க இவர்கள் பலவகையான வழிமுறைகளை கையாளுகின்றனர். உதாரணமாக தங்கவேட்டைய குறிப்பிடலாம். இதில் பெரிய அளவு பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. ஆனால் மக்கள் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.
மீடியா இப்படி பிரச்னைகளுக்கு தீர்வு சொல்றதோட மற்றொரு நோக்கம். இந்த சமூகத்திற்கு நல்லது செய்வது போல காட்டுவதற்காக மக்களின் இந்த மனப்போக்கிற்கு இன்றைக்கு வந்ததல்ல. முந்தைய காலத்துல வீதியோற நாடகம் போடற பழக்கம் இருந்து வந்தது. அதுல திரௌபதி நாடகம் போடும் போது, அதில் திரௌபதியாக நடித்த கதாபாத்திரம் மேடையை விட்டு இறங்கும் போது, மக்கள் அவரை திரௌபதியாகவே கருதி காலில் விழுந்து வணங்குவர். ஆனால் அன்றைய நாடகங்களில் அனைத்திலும் ஆண் கதாபாத்திரங்களே நடிப்பர். திரௌபதி வேடத்திலும் ஆண்களே பங்கேற்பர். ஆனால் மக்களோ ஆண், பெண் என பிரித்துப் பார்க்காமல் கதாபாத்திரத்தோட ஒன்றிப் போய் சூடம் காட்டுவது, விழுந்து வணங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய மக்களின் மனப்போக்கிற்கு முன்னோர்கள் தொட்டே தொடர்ந்து வருகிறது.
இந்திய சமூகம் இன்னும் மாடர்ன், ஆகவில்லை. (கூணூச்ஞீடிtடிணிண கண்தூஞிடணி) மாறவில்லை. இன்றைய கல்வி முறையையும் இதற்கு காரணமாகக் கூறலாம். ஏனெனில் கல்வி இன்று தகவல் தரும் ஒன்றாகவே உள்ளது. அத்தகவல் வாழ்க்கையில் நெருக்கடிவரும் போது புரிதவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. தனிமனித பிரச்னையை புரிந்து கொள்ள வழிகாட்ட நமது கல்வி முறை தவறிவிட்டது.
வாழ்க்கை கல்வி இவற்றிற்கிடையேயான இடைவெளி பிரச்னைகளுக்கான தீர்வை வெளியே தேட வைக்கிறது. இப்பாடத்திட்டத்தினால் என் வாழ்க்கைக்கு என்ன பயன் என மாணவன் ஆசிரியரிடம் கேட்பதில்லை. ஆனால் நடிகைகளிடம் கேட்கிறான். இந்நிலை மாற ஆசிரியர்கள் தீர்வு சொல்ல முன்வர வேண்டும. ஏன்னா நமது பழைய குருகுல கல்வி முறை இப்படித்தான் இருந்தது. ஆனால் இன்னைக்கு பொய்யான இடத்தில் பதிலை தேடிப் போய்க்கிட்டு இருக்காங்க. இது ஆபத்தான போக்கு. ஏன்னா இந்த மீடியா பிரபலங்களே பிற்காலத்தில் அரசியல் தலைவர்களாக வரலாம்' என்றார்.
இது பற்றி தொடர்பியல் துறை பேராசிரியர் ரவீந்திரன் கூறுகையில்:
"இது சந்தைப்படுத்துதலின் ஓர் அம்சமாகும். பாரம்பரியத்திலிருந்து நவீனயுகம் நோக்கி செல்வதையே இது குறிக்கிறது. மக்களுக்கான பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது என்பது எல்லோராலும் செய்யக்கூடிய காரியம் அல்ல. அத்துறையில் நிபுணர்களால் தான் இதை செய்ய முடியும். மீடியா மூலம் புகழ்பெறும் இவர்கள் ஒரு சிறந்த உளவியல் நிபுணரின் பணியைச் செய்ய முடியாது. இவர்கள் தங்களைத் தானாகவே ஆலோசனை கூறுபவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார்கள். மீடியாவும், இவர்களைப் பயன்படுத்தி தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் மக்களைத் தன்பக்கம் அதிக அளவு கவர்ந்து இழுக்கிறது. தனது விற்பனை லாபத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது.
மீடியா மூலம் பிரபலமாகும் இவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் நமது சொந்த சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் நிலைக்கு தகுதியானவர்களாக இருக்க முடியாது என்பது நாம் அறிந்த ஒன்றே. மீடியா இவர்களை விளம்பரங்களுக்கும், க.கு.அ. (கதஞடூடிஞி ஞுணூதிடிஞிஞு அணணணிதணஞிஞுட்ஞுணt)போன்வற்றிற்கும் பயன்படுத்தாமல், ஏன் ஆலோசகராக பயன்படுத்த வேண்டும்? மீடியா மூலம் சிறந்த நடிகையாக மட்டும் இவர்களால் பிரதிபலிக்க முடியுமே தவிர, ஒரு மருத்துவராகவோ அல்லது மனநல நிபுணராகவோ மாற முடியாது.
முன்பு மீடியா, பிரபலங்களை பொதுமக்களுக்கு கருத்துகூறவோ அறிவுறுத்தவோ விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தது. ஆனால் இன்று அதுவே அவர்களை மனநல ஆலோசர்களாகவும் மாற்றியுள்ளது.
இது மக்கள் ஊடகங்களில் பார்க்கும் கதாபாத்திரங்களோடு ஒன்றிவிடும் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. தனது சொந்த வாழ்வில் அனுபவிக்கும் பாதிப்புகளை, ஊடகங்களில் பார்க்கும் அக்கதாபாத்திரங்களும் அனுபவித்து அதற்கு தீர்வு காணும் போது, இவர்கள் கதாபாத்திரத்தோடு ஒன்றி தன்நிலை இழக்கின்றனர். ஆனால் வளர்ந்த நாட்டிலும் இத்தகைய செயலை மக்கள் அனுமதிப்பதில்லை. இங்கோ, மீடியா மூலம் இவர்களிடம் மாட்டியவர்கள் வாசகர்கள் ஆவர் என்றார்.
மீடியா தனது இந்தப் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் மக்களும் தங்களது மனநிலையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். ஊடகங்களையும், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் வேறுபடுத்திப் பார்த்து, தீர்வுகாண முற்பட வேண்டும்.

படம், செய்தி: ஆர்.பத்மலதா

Comments:
ராதிகாவும், தேவயானியும் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வது சரியா?

சரிபார்த்து மக்கள் செயல்படவேண்டும்
கோவை
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?